தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 2 கப்
வெள்ளை முழு உளுந்து -1/4 கப்
பெருங்காயம் - ஒரு சிறுநெல்லிக்காய் அளவு
வெண்ணெய் - 2மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(நறுக்கியது) - 1/4 கப்
எள்ளு - 1 மேசைக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
முதலில் தட்டை செய்ய தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். கடலைப்பருப்பை நன்றாக கழுவி, ஊறவைக்கவும்(குறைந்தது 2மணிநேரம்). பெருங்காயத்தை தனியாக சூடு நீரில் ஊறவைக்கவும். இப்போது மாவு தயாரிக்கலாம்.
முதலில், பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 4 மணிநேரம் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும், நீரை வடித்து விடுங்கள். சிறு துளி நீர் கூட இருக்கக்கூடாது. ஒரு வடிகட்டி பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரை வடிய விடவும்.
நீர் வடிந்ததும், ஒரு சுத்தமான காட்டன் துணியில் அரிசியை பரப்பி மின்விசிறி(fan) கீழே காய வைக்கவும். அரிசியை கையில் எடுத்து கொழுக்கட்டை பிடித்தால், உதிர வேண்டும் .அதே சமயம் சிறிது ஈரம் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம், அரிசியை மெஷினிலோ மிக்ஸியிலோ நன்றாக பொடித்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் அறைக்கும்போது கட்டித்தட்டும், ஒரு ஸ்பூனால் கிளறி விட்டு நைசாக அரைக்கவும். இதனை ஆற வைத்து, சலித்து எடுக்கவும். சலித்த மாவை, ஒரு கடாயில் கொட்டி , தீயை குறைத்து, வறுக்கவும்.
மாவு லேசாக சூடு ஏறியதும், கோலம் போடுவது போல மாவை எடுத்து கொடு போடவும். கோலமாவு போல கோலம் போட வந்தால், அடுப்பை அணைத்து விடவும். இந்த மாவை ஒரு பேப்பரில் கொட்டி ஆற வைக்கவும். மாவு ஆறும் நேரத்தில், உளுந்து மாவு தயார் செய்யலாம். ஒரு வெறும் வாணலியில், உளுந்தை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும்.
இப்போது மாவுகள் தயார். மாவுகள் நன்றாக ஆறியிருக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில், 2கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு, தேவையான உப்பு சேர்க்கவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளவும். ஊறவைத்த கடலை பருப்பை, நீர் வடித்து மாவுடன் சேர்க்கவும். ஊறவைத்த பெருங்காயத்தை வடிகட்டி, மாவுடன் சேர்க்கவும். எள்ளு, ஓமம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும். வெண்ணையை சூடு நீரில் வைத்து(டபுள் பாயில் முறை) லேசாக உருக்கி, மாவுடன் சேர்க்கவும்.
அனைத்து பொருட்களையும் சேர்த்தும், சிறிது சிறிதாக நீர் தெளித்து மிருதுவாக பிசையவும். உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவில் சிறிதாக கிள்ளி, சிறிய நெல்லிக்காய் அளவில் உருட்டி வைக்கவும். ஒரு பால் கவரில் எண்ணெய் தடவி, உருட்டி மாவை, சமமாக விரல்களால் தட்டி, போர்க் ஸ்பூன் வைத்து இரண்டு இடங்களில் குத்தி, ஒரு பேப்பர் அல்லது ஒரு பெரிய கவரில் தட்டையை எடுத்து வைக்கவும். கைகளால் தட்ட வரவில்லை எனில், எண்ணெய் தடவிய கவரில் உருண்டையை வைத்து, அதன் மேல் எண்ணெய் தடவிய இன்னொரு கவரை வைத்து, ஒரு டம்ளர் வைத்து லேசாக அழுத்தவும்.
மெல்ல மேல் கவரை எடுத்து, ஒரு போர்க் ஸ்பூனால் இரண்டு இடங்களில் குத்தி, கவரில் இருந்து பொறுமையாக தட்டையை எடுத்து ஒரு பேப்பர் அல்லது கவரில் வைக்கவும். போர்க்கில் குத்தவில்லை என்றால் பூரி போல உப்பிவிடும். எல்லா மாவையும் தட்டி முடிந்ததும், ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஒரு தட்டையை போட்டு பாருங்கள். தட்டை கீழே பொய் உடனே மேலே வரவேண்டும்.
இந்த சூட்டில், தீயை மிதமாக குறைத்து, தட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும். நீங்கள் தட்டைகளை எண்ணையில் போட்டவுடன் நுரைக்கும், நுரை அடங்கியதும் தட்டைகளை எடுத்துவிடலாம். தட்டை வெந்ததன் அறிகுறி இதுவே. பொரித்த தட்டைகளை ஒரு அகலமான தட்டில் வைத்து, சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். சுவையான தட்டை தயார்.